Wednesday, 6 May 2015

கடவுளை வடிக்கும் கம்மாளர்கள்.

மனிதன் கண்ணால் காண முடியாத ஒரே விஷயம்-கடவுள். கற்பனையில் பதிந்த கடவுளுக்கு வடிவத்தை கொடுத்து துதிக்க வைத்தவர்கள் சிற்பிகள்.
கடவுள் கல்லால் வடிக்கப்பட்டிருந்தாலும் அதன் முன்பு நின்று ஆற்றாமையை சொல்லி ஆறுதல் அடையும் பக்தர்கள் நிறைந்த நாடு இது. கோடிக்கணக்கான மதிப்பிலான வைர வைடூரிய ஆபரணங்களுடன் அருள்பாலிக்கும் திருப்பதியும், அரச மரத்தையே பக்தர்களை காண அச்சாரமாக ஆக்கிக் கொண்ட விநாயக பெருமானும் சிற்பிகளின் கையில் தான் உருவாகிறார்கள். தஞ்சை பெரிய கோவிலின் சிற்பங்கள், மதுரை மீனாட்சி கோவிலின் வடிக்கப்பட்டுள்ள சிலைகள், மாமல்லபுரத்து சிற்பங்கள் என்று சிற்ப வேலைப்பாடுகள் கம்மாளர்களின் கைத்திறனை சொல்கின்றன.
மதுரையின் பசுமலை என்ற இடத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சிற்பிகள் பட்டரைகளை அமைத்து கோவில்களுக்கான தெய்வங்களின் சிலைகளை வடித்து வருகின்றனர். இங்கிருக்கும் சிற்பி நாகசுந்தரம் கம்மாளர் சொல்லும்போது.....
"நாங்கள் 4 தலைமுறைகளுக்கும் மேலாக சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு பெரிய அளவில் படிப்பெல்லாம் கிடையாது. எங்களது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த கணிதங்களை பயன்படுத்தி மிகப்பெரிய கரடுமுரடான கற்களை கூட சிலையாக வடிக்கிறோம்.
எந்த எந்திரங்களும் வராத காலத்திலேயே எங்களை போன்ற சிற்பிகளின் முன்னோர்கள் ஒரு சாதாரண உளியையும், சுத்தியலையும் பயன்படுத்தியே கடின உழைப்பினால் பராம்பரிய கோவில்களின் தெய்வங்களான சிவன், பார்வதி, அன்னபூரணி, மீனாட்சி, துர்க்கை, தட்சணாமூர்த்தி, விநாயகர் சிலைகளை வடித்தார்கள். இதே போல் நர தேவதைகள் என்கிற அய்யனார், கருப்புசாமி, மதுரைவீரன், முனியாண்டி உள்ளிட்ட தெய்வச்சிலைகளை உருவாக்கினார்கள்.
எங்களால் செய்யப்பட்ட சிலைகள் இன்றைக்கு மலேசியா, சிங்கப்பூர் முதல் அமெரிக்கா நாட்டில் உள்ள கோவில்கள் வரை கற்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மிகவும் நுணுக்கமான சிலை வடிக்கும் நுட்பம் கம்மாளர்களுக்கு மட்டுமே கைவந்த கலை.
சிலைகளை வடிப்பதற்கான பாறாங்கற்கள் மதுரையை ஒட்டியுள்ள பேரையூர், ஆண்டிப்பட்டி அருகில் இருக்கும் சுப்புலாபுரம், நாகர்கோவில் அருகில் இருக்கிற மயிலாடி என்ற இடத்தில் தான் கிடைக்கின்றன. இந்த இடங்களில் கிடைக்கும் கருப்புக்கல்லில் தான் தெய்வங்களின் சிலைகளையே வடிக்க முடியும். அதிலும் குறிப்பாக இங்கு கிடைக்கும் கற்களில் இருந்து தான் தமிழகத்தின் மிகப்பெரிய சிலையாக நிறுவப்பட்டுள்ள குமரி திருவள்ளுவர் சிலை செய்யப்பட்டது" என்கிறார்.
இவ்வளவு பெருமை பட பேசும் இது போன்ற கல்தச்சர்களுக்கு இன்றைய பிரச்சினை ....கிரானைட் மாபியாக்கள் மலைகளை தோண்டியதால் அரசாங்கம் ஆங்காங்கே ஒட்டுமொத்தமாக கற்களை எடுக்க தடை போட்டுள்ளதால் இவர்களுக்கு சிலை செய்ய கற்கள் எடுப்பதிலும் சிக்கல் இருந்து வருகிறது.
தெய்வ திருவுருவங்களை செய்யும் சிற்பிகள் மட்டும் அல்லது கம்மாளர்கள் தங்கள் வாரிசுகளை அவர்கள் எந்த தொழிலில் இருந்தாலும் குல தொழில் பற்றிய அறிவையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் சிற்பி நாகராஜன்.